ஆண்டவர் நல்லவர் அவருக்கு நன்றி கூறுங்கள். அவரது இரக்கம் என்றென்றும் நீடிக்கும் (சங்கீதம் 136)
எம் ஆண்டவரே! எம் தேவனே! நாம் உம்மில் முழு நம்பிக்கை வைக்கின்றோம். ஏனெனில் நீர் இரக்கமே உருவானவர். எமது பாவங்களுக்காக நாம் மனம் வருந்தி உமது இரக்கத்தை வேண்டி நிற்கிறோம். எமது எல்லாத் தேவைகளையும் உமது சித்தத்தின்படி நிறைவு செய்வீர் என்று உம்மில் முழு நம்பிக்கை வைக்கின்றோம். எங்களை நீர் மன்னிப்பதுபோல நாங்கள் மற்றவர்களை மன்னிப்பதற்கு எமக்கு உதவி தந்தருளும். நாங்கள் எங்கள் செயல்களாலும், சொற்களாலும், செபங்களாலும் இரக்கம் உள்ளவர்களாக இருப்போம் என்று உறுதி அளிக்கின்றோம். மனிதப் பலவீனங்களின் காரணமாகப் பயங்கள் இருப்பினும், உமது அளவற்ற அன்பிலும், இரக்கத்திலும் நாம் நம்பிக்கை வைக்கிறோம். எமது சொந்த வாழ்வையும், இன்றைய நிலையையும், எமது நிச்சயமற்ற எதிர்கால வாழ்வையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக்கின்றோம்.
நாம் வாழும் இவ்வுலகத்தின் எதிர்காலத்தையும், எமது தாய்த் திருச்சபையையும், எமது சமுதாயத்தையும், எமது குடும்பங்களையும், எமது அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எம்மீதும், முழு உலகின் மீதும் உமது இரக்கத்தைப் பொழியும்படி உரத்த குரலில் நாங்கள் உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். உமது உருவத்திலும், சாயலிலும் படைக்கப்பட்ட எம்மீது உமது பார்வையைச் செலுத்தியருளும். தூய ஆவியின் வல்லமையால் மரி அன்னையின் உள்ளத்தில் எங்களை இரக்கத்தின் உயிருள்ள உருவங்களாக ஆக்கியருளும். எல்லோரும் உமது இரக்கத்தின் ஆழத்தைக் கண்டு எக்காலமும் உமது இரக்கத்தின் புகழைப் பாடுவார்களாக – ஆமென்.
|