புனித சூசையப்பரே! எங்களது ஆபத்துக்களில் உமதண்டை ஓடிவருகிறோம். உமது பரிசுத்த பத்தினியின் உதவியை மன்றாடின பின்பு உம்முடைய அடைக்கலத்தை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கிறோம். உம்மை மாசில்லாக் கன்னியாகிய தேவ தாயாருடன் ஐக்கியப்படுத்திய அந்த நேச மூலமாக மன்றாடுவதுமன்றிக், குழந்தையாகிய இயேசுநாதரை அரவணைத்த பிதாவின் நேசமூலமாகவும், இயேசுக் கிறிஸ்துநாதர் தமது இரத்தத்தினால் அடைந்து கொண்ட சுதந்திரத்தை நாங்கள் இழந்து போகாதபடிக்கு தற்காக்கவும்,, எங்கள் அவசியங்களிலே உமது வல்லமையைக் கொண்டு எங்களுக்கு உதவி புரியவும் உம்மை மன்றாடுகிறோம்.
ஓ! தேவ திருவுளத்தால் திவ்விய குடும்பத்துக்குக் காவலாய்த் தெரியப்பட்டவரே! இயேசுக் கிறிஸ்துநாதருடைய உத்தம குடும்பத்தைத் தற்காத்தருளும். அன்பான பிதாவே! சகலவிதமான ஒழுங்கீனங்களிலும், கேடுகளிலும், தவறுகளிலும் நின்று எங்களை விலக்கியருளும். எங்கள் ஆபத்துக்களில் அதிக பலமும் தஞ்சமுமானவரே! பசாசுகளுடன் போர் புரியும் இந்த வேளையில் மோட்சத்தில் நின்று எங்களைக் கண்ணோக்கும். பாலக இயேசுவைப் பெருந்தீங்கில் நின்று இரட்சித்தது போன்று சருசேசுரனுடைய பரிசுத்த திருச்சபையையும், சதிகாரச் சத்துராதிகள் இடத்தில் நின்றும், சகல பொல்லாப்புக்களில் நின்றும் காத்தருளும். உம்மைக் கண்டு பாவித்து உமது உதவியாற் தாபரிக்கப்பட்டு பரிசுத்தராய்ச் சீவிக்கவும், நித்திய மோட்ச பாக்கியத்தை அடைந்து கொள்ளவும் எங்கள் ஒவ்வொருவரையும் உமது இடைவிடாத அடைக்கலத்தில் வைத்தருளும் தகப்பனாரே – ஆமென்.