செபமாலையின் முடிவில் சொல்லத்தக்க செபங்கள்

காணிக்கைச் செபம்
அத்தியந்த மகிமையுள்ள பரலோக பூலோக இராசேஸ்பரியான பரிசுத்த தேவமாதாவே! உம்முடைய திருப்பாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக் கொடுக்கிறோம். இதை நீர் கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து, இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளினுடைய பலனை அடையவும், சுகிர்த போதனையின்படியே நாங்கள் நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும், பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே – ஆமென்.


கிருபை தயாபத்துச் செபம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சீவமே! எங்கள் மதுரமே! எங்கள் தஞ்சமே வாழ்க!. பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்து அழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி இரந்து மன்றாடுகின்ற தயே! உமது தயாபரமுள்ள திரு இரக்கக் கண்களை எங்கள் மேல் திருப்பியருளும்.இதுவன்றி நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தையும் எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும் கிருபாகரியே! தயாபரியே! பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே! சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே!
முத: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராயிருக்கத்தக்கதாக
அனை: சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்–
மாசில்லாமல் உற்பவித்த தேவ மாதாவே!
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக மன்றாடும் - 03 முறை.

அர்ப்பணச் செபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து மன்றாடிக் கேட்ட ஒருவனாகிலும், உம்மால் கைவிடப்பட்டதில்லை என்பதனை நினைவு கூர்ந்தருளும். கன்னியரான கன்னிகையே! தயவுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அன்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள், உமது தயாளத்தைக் காத்துக்; கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறோம். அவதரித்த வார்த்தையின் தாயே! எங்கள் மன்றநாட்டைப் புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளும் – ஆமென்.