நம் நாட்டுக்காக
தேவ தாயாரை நோக்கிச் செபம்

பேரன்பும் தயாபரமும் நிறைந்த தாயே!
எமது நாட்டின் இராக்கினியும் பாதுகாவலியுமானவளே!
உமது பிள்ளைகளாகிய எமது இன்னல்கள் நிறைந்த இவ்வேளையில், எங்களைக் கருணைக் கண்கொண்டு நோக்கியருள வேண்டுமென்று இரந்து மன்றாடுகின்றோம்.
நேசத்தாயே! யுத்த அபாயங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் எம் மக்களைக் காப்பாற்ற தக்க தருணத்தில் எமக்குப் பாதுகாவலாக வந்துள்ளீர்.
என்றுமே தோல்வி காணாத உம்முடைய அன்பைப் பார்த்து சகலவிதமான வன்செயல்களிலிருந்தும், பகைமையிலிருந்தும் எம் மக்களைக் காத்தருள வேண்டுமென்று இரந்து மன்றாடுகின்றோம்.
எமது நாட்டில் நீதியினதும், அன்பினதும் இராட்சியத்தைக் கட்டியெழுப்ப அருள் புரிந்தருளும்.
அன்பான தாயே! உமது தாய்க்குரிய அன்பையும், கரிசனையையும் நன்றாக அறிந்துகொண்ட நாம், எமது நாட்டிலுள்ள சகல மக்களையும் உமது அன்பான தாபரிப்பிலும், வழி நடத்துதலிலும் ஒப்படைக்கின்றோம்.
எமது சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் உருவாக்க எமக்கு உதவி புரிந்தருளும். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் பிள்ளைகளாக வாழ எமது மத்தியில் நிலையான சமாதானத்தைப் பெற்றத் தந்தருளும் தாயே – ஆமென்.