இறை இரக்கத்தின் செபம்

நவநாட்களை மாதத்தின் முதல் வெள்ளியில்
ஆரம்பிப்பது பொருத்தமானது

இறை இரக்கத்தின் நவ நாட்களின் முதலாம் நாள்

இன்றைய நாளில் எல்லா மனிதர்களையும் குறிப்பாக எல்லாப் பாவிகளையும் என்னிடம் கொண்டு வந்து என் இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். இவ்வாறு செய்வதனால் ஆன்மாக்களின் இழப்பினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு நீர் ஆறுதலாய் இருக்கின்றீர். உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இறைவனின் இரக்கம் கிடைக்க வேண்டுமென்றும், குறிப்பாக பாவிகள் அவரது இரக்கத்தால் மனமாற்றமடைய வேண்டுமென்றும் இறைவேண்டல் செய்வோம்.
இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் எங்கள் மீது மன்னிப்பும், இரக்கமும் காட்டுவது உமக்கு இயல்பாக இருக்கின்றது. எங்களுடைய பாவங்களைக் கணக்கில் எடுக்காது, உமது எல்லையற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் கருத்தில்கொண்டு, இரக்கம் நிறைந்த இல்லமாகிய உமது இதயத்துள் எங்களைத் தங்கவையும். அங்கிருந்து நாங்கள் ஒருபோதும் விலகிப்போக விடாதேயும். வானகத்தந்தையையும், தூய ஆவியையும் இணைக்கும் உமது அன்பின்பொருட்டு இதனை நாங்கள் உம்மிடம் இரக்கமாகக் கேட்கின்றோம். எக்காலத்துக்கும் தந்தையே! இயேசுவினுடைய திரு இருதயத்தின் மகத்தான இரக்கத்தால் ஒன்று சேர்க்கப்பட்ட எல்லா மக்கள் மீதும் குறிப்பாக எளிமையான பாவிகள்மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். துயரம் நிறைந்த அவரது பாடுகளை முன்னிட்டு எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும். இதனால் வல்லமை மிகுந்த உமது இரக்கத்தை நாங்கள் எக்காலமும் போற்றுவோம் - ஆமென்..

இறை இரக்கத்தின் நவ நாட்களின் இரண்டாம் நாள்

இன்றைய நாளில் குருக்களையும், துறவிகளையும் என்னிடம் கொண்டு வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் அவர்களைத் தோய்த்தெடும். எனது இரக்கம் மக்களினங்கள் மேல் பெருக்கெடுத்துப் பாய்வதற்கு அவர்கள் வாய்க்கால்களாய் இருப்பதனால், வேதனைகள் நிறைந்த என்பாடுகளை நான் தாங்கிக் கொள்ள அவர்கள் எனக்கு உந்துதலாய் இருக்கிறார்கள். மக்களினங்கள் மேல் இறைவனின் இரக்கம் பாய்ந்தோடுவதற்கு வாய்க்கால்களாய் இருக்கும் குருக்கள், துறவிகளுக்காக இறை வேண்டல் செய்வோம். இரக்கம் நிறைந்த இயேசுவே! நீரே எல்லா நன்மைகளுக்கும் ஊற்றும் உறைவிடமுமாய் இருக்கின்றீர். உமது பணிக்கெனத் தம்மையே அர்ப்பணித்துள்ள எல்லாக் குருக்களும், துறவிகளும் உமது இரக்கத்தின் பணிகளைத் தகுதியுடன் நிறைவேற்ற அவர்கள் மீது உமது அருளை ஏராளமாக பட பெருகச்செய்யும். அந்த இரக்கச் செயல்களைக் காண்போர் அனைவரும் வானகத்திலுள்ள இரக்கத்தின் தந்தையை மகிமைப் படுத்துவார்களாக. எக்காலத்துக்கும் தந்தையே! உமது திராட்சைத் தோட்டத்துக்கென நீர்தாமே தெரிந்து கொண்ட குருக்கள் மீதும்இ துறவிகள் மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். அவர்களை உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் நிறைத்தருளும் . உம் திருமகனுடைய இதயத்தின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட அவர்களுக்கு, மீட்பு வழியில் மற்றவர்களை வழிநடத்துவதற்குத் தேவையான உமது ஞான வெளிச்சத்தையும், பலத்தையும் கொடுப்பீராக. அவர்கள் எக்காலமும் உமது அளவில்லா இரக்கத்திற்கு ஒரேகுரலில் புகழ்ச்சிப்பா இசைப்பார்களாக – ஆமென்.

இறை இரக்கத்தின் நவ நாட்களின் மூன்றாம் நாள்

இன்றைய நாளில் இறைவனின் இரக்கத்தில் பற்றுறுதியும், பிரமாணிக்கமும் உள்ள எல்லா மக்களையும் என்னிடம் கொண்டுவந்து என் இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் அவர்களைத் தோய்த்தெடும். சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள்.
இறைவனின் இரக்கத்தில் பற்றுறுதி கொண்டு அவருக்குப் பிரமாணிக்கமாய் வாழ முடிவெடுத்துள்ள எல்லாக் கிறிஸ்தவ மக்களுக்காகவும் இறை வேண்டல் செய்வோம்.
இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் உமது இரக்கக் களஞ்சியத்திலிருந்து அளவிற்கு அதிகமாய் உமது அருட்கொடைகளை அனைவருக்கும் அள்ளித் தருகின்றீர். உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் எங்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும். அங்கிருந்து நாங்கள் ஒரு போதும் விலகிப் போக விடாதேயும். வானகத் தந்தையானவர் மட்டில் உள்ள பாசப் பற்றுதலால் பற்றி எரியும் உமது இதயத்தின் அன்பை முன்னிட்டு எங்களுக்கு இதனைத் தந்தருள உம்மை இரந்து மன்றாடுகின்றோம்.
எக்காலத்துக்கும் தந்தையே! உமது திருமகனின் வழி வந்தவர்களான பற்றுறதியும், பிரமாணிக்கமும் கொண்ட இறைமகள்ள அனைவர்மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். கிறிஸ்துவின் துன்பம் நிறைந்த பாடுகளின் பொருட்டு அவர்களுக்கு உமது ஆசீரை வழங்கி, உமது தொடர்ச்சியான பாதுகாப்பினால் அவபர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்டுள்ள அன்பையும், நம்பிக்கையையும் ஒருபோதும் இழந்துபோகாது வானதூதரோடும், புனிதரோடும் எல்லையில்லா உமது இரக்கத்தை எக்காலமும் மகிமைப் படுத்துவார்களாக – ஆமென்.

இறை இரக்கத்தின் நவ நாட்களின் நான்காம் நாள்

இன்றைய நாளில் தந்தையாம் இறைவனை நம்பாதவர்களையும் என்னை இன்னமும் அறியாதவர்களையும் என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். வேதனைகள் நிறைந்த எனது பாடுகளின் போது இவர்களையும் நான் நினைவு கூர்ந்தேன். என்னை அறிந்து கொள்ளவேண்டும் என்ற இவர்களது வருங்கால ஆர்வம் என் இதயத்துக்கு ஆறுதலாய் இருக்கிறது. தந்தையாம் இறைவனுடையதும், இயேசுவினுடையதுமான இரக்கத்தை இன்னமும் அறியாத மக்களுக்காக இறை வேண்டல் செய்வோம். இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் உலகம் முழுவதற்கும் ஒளியாக இருக்கின்றீர். இரக்கம் நிறைந்த உம்முடைய இதயத்தினுள்ளே தந்தையாம் இறைவனை நம்பாதவர்களையும், உம்மை இன்னமும் அறியாதவர்களையும் தங்கவையும். உமது அருளின் கதிர்வீச்சுக்கள் இவர்களுக்கு ஞானவெளிச்சத்தைக் கொடுப்பதாக. இவர்களும் எங்களோடு இணைந்து ஆச்சரியத்துக்குரிய உமது இரக்கத்தைப் புகழ்ந்து போற்றுவார்களாக. உமது இரக்கம் நிறைந்த உறைவிடமான இருதயத்திலிருந்து இவர்கள் ஒருபோதும் விலகிப்போக விடாதேயும். எக்காலத்துக்கும் தந்தையே! உம்மை நம்பாதவர்களாயிருந்தாலும், இயேசுவை அறியாதவர்களாயிருந்தாலும் இவர்கள் இயேசுவின் இரக்கம் நிறைந்த இருதயத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதனால், இவர்கள் மீது உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். இவர்களை நற்செய்தியின் வெளிச்சத்துக்குக் கொண்டுவாரும். உம்மை அன்பு செய்வதில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும் என்பதனை இவர்கள் அறியாதிருக்கின்றார்கள். இவர்களும் உமது இரக்கத்தை எக்காலமும் வாழ்த்த வரமருளும் - ஆமென்.


இறை இரக்கத்தின் நவ நாட்களின் ஐந்தாம் நாள்

இன்றைய நாளில் என் திருச்சபையில் இருந்து தங்களைப் பிரித்துக் கொண்டவர்களை என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். வேதனைகள் நிறைந்த எனது பாடுகளின் போது எனது உடலும், இதயமுமான திருச்சபையில் இவர்கள் கிழிசலை உண்டாக்கினார்கள். இவர்கள் திருச்சபையோடு ஒன்றுசேரத் திரும்பி வருவதனால் எனது புண்கள் ஆறுகின்றன. இவ்வாறு இவர்கள் என் பாடுகளின்போது வேதனையைத் தணிக்கின்றார்கள். கிறிஸ்துவின் மறை உடலாகிய திருச்சபையில் இருந்து விலகிப் போனவர்களுக்காக இறை வேண்டல் செய்வோம். இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் நன்மைத் தனத்தின் உருவமாய் இருக்கின்றீர். உம்மிடம் ஒளியைத் தேடி வருவோருக்கு நீர் அதனை மறுப்பதில்லை. உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள்ளே உமது திருச்சபையில் இருந்து விலகிப் போனவர்களைத் தங்கவையும். திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்குள் இவர்கள் வந்து சேர உமது ஞான வெளிச்சத்தால் இவர்களை இழுத்தருளும். உமது இரக்கம் நிறைந்த இதயத்திலிருந்து இவர்கள் ஒருபோதும் விலகிப்போக விடாதேயும். இவர்களும் உமது பேரிரக்கத்தைப் போற்றிப் புகழ்வார்களாக. எக்காலத்துக்கும் தந்தையே! நீர் கொடுக்கும் அருள்வழங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது அவற்றை வீணாக்குவதோடு இ தங்கள் பிழைகளிலே பிடிவாதமாய் நிலைகொண்டு, உமது திருமகனின் திருச்சபையில் இருந்து தம்மை விலக்கிக் கொண்டவர்கள் மீது உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். இவர்களது பிழைகளைப் பாராது, இவர்களும் இயேசுவின் இரக்கம் நிறைந்த இருதயத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்பதனால், உமது சொந்த மகனின் அன்பையும், வேதனைகள் நிறைந்த அவரது பாடுகளையும் பார்த்து இவர்களும் உமது பேரிரக்கத்தை எக்காலத்துக்கும் மகிமைப் படுத்தச் செய்வீராக – ஆமென்.


இறை இரக்கத்தின் நவ நாட்களின் ஆறாம் நாள்

இன்றைய நாளில் கனிவும், மனத்தாழ்மையும் கொண்ட அனைத்து மக்களையும், குழந்தைகளையும் என்னிடம் கொண்டு வந்து எனது இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். இவர்கள் எனது இருதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றார்கள். எனது துன்பவேளைகளில் இவர்கள் எனக்குப் பலமூட்டுகின்றார்கள். கனிவும் மனத்தாழ்மையும் உள்ள அனைத்து மக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் இறை வேண்டல் செய்வோம். இரக்கம் நிறைந்த இயேசுவே! 'நான் கனிவும், மனத்தாழ்மையும் உள்ளவன் என்பதனை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்' என்று நீர்தாமே கூறியிருக்கின்றீர். கனிவும், மனத்தாழ்மையும் உள்ள அனைத்து மக்களையும், குழந்தைகளையும் இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றுத் தங்கவையும். இவர்கள் வானுலகத்தைப் பரவசத்தில் ஆழ்த்துவதோடு, வானகத் தந்தைக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இறைவனின் இருக்கை முன் நறுமணம் வீசும் மலர்களாய் திகழ்கின்றார்கள். இவர்கள் இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் நிரந்தர இடம்பெற்று உமது அன்பிற்கும், இரக்கத்திற்கும் தொடர்ச்சியான புகழ்ச்சிப்பா இசைப்பார்களாக. எக்காலத்துக்கும் தந்தையே! இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தினுள் தங்கி வாழுகின்ற கனிவும், மனத்தாழ்மையும் கொண்ட அனைத்து மக்கள் மீதும், குழந்தைகள் மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருமகனின் சாயலை ஒத்திருக்கின்றார்கள். இவர்களின் நறுமணம் பூமியிலிருந்து எழும்பி உமது இருக்கையைப் போய்ச் சேருகின்றது. அனைத்து நன்மைகளுக்கும், இரக்கத்திற்கும் தந்தையே! இவர்கள் மேல் உள்ள உமது அன்பையும், மகிழ்ச்சியையும் முன்வைத்து எம்மையும் இந்த உலகம் முழவதனையும் ஆசீர்வதித்தருளும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எக்காலத்துக்கும் உமது இரக்கத்தைப் போற்றிப் புகழ்வோமாக – ஆமென்.

இறை இரக்கத்தின் நவ நாட்களின் ஏழாம் நாள்

இன்றைய நாளில் எனது இரக்கத்தை வணங்கி மகிமைப்படுத்தும் அனைவரையும் சிறப்பாக என்னிடம் கொண்டுவந்து என் இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். இவர்கள் என் பாடுகளைத் தியாணித்து, துக்கத்தில் ஆழ்ந்து என் ஆன்மாவோடு ஒன்றிக்கிறார்கள். இவர்கள் எனது இரக்கம் நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயல்களாக விளங்குகின்றார்கள். இவர்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு விளங்குவார்கள். இறைவனுடைய இரக்கத்தில் பற்றுறுதி கொண்டு அதனை மற்றவர்களுக்கும் பரப்ப ஆர்வத்தோடு உழைக்கும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வோம். இரக்கம் நிறைந்த இயேசுவே! உமது இரக்கத்தின் பெருமையை வணங்கிப் போற்றும் அனைவரையும் உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் தங்கவையும். இவர்கள் வானகத் தந்தையிடம் இருந்தே பலம் பெறுகின்றனர். இவர்கள் உம்மோடு ஒன்றித்து, உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, துன்ப துயரங்கள் மத்தியிலே வாழ்க்கை நடத்துகின்றார்கள். நீர் மனுக்குலத்துக்காகப்பட்டவேதனைகளில் இவர்களும் பங்கெடுக்க விரும்புகின்றார்கள். இவர்கள் இறக்கும்போது உமது இரக்கம் இவர்களை ஆட்கொள்வதனால் தண்டனைத் தீர்வையில் இருந்து இவர்களைக் காத்தருள்வீராக. எக்காலத்துக்கும் தந்தையே! ஆழங்காண முடியாத உமது இரக்கத்தை உருக்கமாகப் போற்றி வணங்குவதனால், இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தினுள் தங்கி வாழும் அனைவர் மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். இவர்கள் தமது வாழ்வாலும், வார்த்தையாலும் உம்மை மகிமைப்படுத்தி வாழ்கின்றனர். இவர்கள் நற்செய்தியின் வழியில் வாழ்ந்து, மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுகிறார்கள். இவர்கள் உம்மிலும், உமது வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொண்டுள்ளதால், இவர்களுக்கு உமது மேலான இரக்கத்தைப் பொழிந்து வாழ்வு முழுவதிலும்இ குறிப்பாக மரண வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும் - ஆமென்.

இறை இரக்கத்தின் நவ நாட்களின் எட்டாம் நாள்

இன்றைய நாளில் மரணத்தின் பின் வேதனை அனுபவிப்பதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இறந்தோரின் ஆன்மாக்களை என்னிடம் கொண்டுவந்து என் இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். எனது இரத்தம் அவற்றின் மேலுள்ள நெருப்பு வேதனையைத் தணிக்கிறது. இந்த ஆன்மாக்கள் அனைத்தையும் நான் அன்பு செய்கின்றேன். இவை என் நீதிக்காகப் பரிகாரம் செய்கின்றன. இவற்றிற்கு ஆறுதல் வழங்குவது உமது கையிலேதான் உண்டு. மரணத்தின் பின் வேதனை நிலையில் உள்ள அனைத்து ஆன்மாக்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம். இரக்கமுள்ள இயேசுவின் பரிசுத்த திரு இரத்தம் ஆன்மாக்களின் வேதனையைத் தணிப்பதாக. இரக்கம் நிறைந்த இயேசுவே! 'என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்' என்று கூறியிருக்கிறீர். இறைவனின் நீதிக்குரிய பரிகாரத்தை மேற்கொள்ள வேதனையுறும் இறந்தவர்களின் ஆன்மாக்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் தங்கவையும். உமது இதயத்திலிருந்து கசிந்துவரும் இரத்தமும் நீரும் இவற்றைத் தூய்மையாக்கும். அனற் பிழம்புகளை அணைப்பதாக. உமது இரக்கத்தின் வல்லமை வேதனையுறும் ஆன்மாக்கள் மட்டில் போற்றுதற்கு உரியதாய் இருப்பதாக. எக்காலத்துக்கும் தந்தையே! இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தினுள் தங்கியிருந்து வேதனையுறும் ஆன்மாக்கள் மீது உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். உமது திருமகனின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும், அவரது இதயத்தில் நிறைந்துள்ள துயரத்தின் பெயராலும் வேதனையுறும் ஆன்மாக்களுக்கு, உமது இரக்கத்தைக் காட்டுமாறு கேட்கின்றோம். இயேசுவின் பரிசுத்த திருக்காயங்கள் ஊடாக இந்த ஆன்மாக்களைப் பார்த்து, உமது அளவில்லாத நன்மைத்தனத்தையும், இரக்கத்தையும் அவற்றிற்கு வழங்கியருளும் - ஆமென்.

இறை இரக்கத்தின் நவ நாட்களின் ஒன்பதாம் நாள்

இன்றைய நாளில் மீட்புக்குறித்து எவ்வித ஈடுபாடும் இல்லாமலும், இறைவன் மட்டில் பற்றுறுதி கொள்ளாமலும் ஏனோதானோ என்று வாழ்ந்து வருபவர்களைஇ என்னிடம் கொண்டுவந்து என் இரக்கம் நிறைந்த ஆழ்கடலில் இவர்களைத் தோய்த்தெடும். இவர்கள் என் இதயத்திற்கு நோவை ஏற்படுத்துகின்றார்கள். இவர்களுக்காக நான் ஜெத்சமெனித் தோட்டத்தில் அதிகம் வேதனைகள் அனுபவித்தேன். இறைவன் மீது பற்றுறுதி கொள்ளாது ஆன்மீக வாழ்வில் ஆர்வமின்றி ஏனோதானோ என்று இவ்வுலகில் வாழ்ந்து வரும் அனைத்து மனிதர்களுக்காகவும் இறை வேண்டுதல் செய்வோம். இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர்தாமே இரக்கமாக இருக்கிறீர். இறைவனுக்கு அஞ்சாமல்இ ஏனைய மனிதர்களை மதிக்காமல், இறைப்பற்றோ, ஆன்மீகமோ தேவையற்ற நிலையில், பொருள் பற்று உள்ளவர்களாய் வாழ்ந்துவரும் அனைத்து மனிதர்களையும் உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் தங்கவையும். உமது புனிதமான அன்பின் நெருப்பினால் இவர்களைத் தூய்மைப்படுத்தி, உமது இரக்கத்தில் மூழ்கச் செய்யும். அன்பு என்கின்ற நெருப்பு இவர்களது உள்ளத்தில் பற்றி எரிந்து, இவர்களது வெது வெதுப்புத் தன்மையை நீக்குவதாக. இதனால் இவர்கள் உமது எல்லையற்ற இரக்கத்தை எக்காலமும் போற்றிப் புகழ்வார்களாக. எக்காலத்துக்கும் தந்தையே! உம்மைத் தெரிந்து கொள்வது தொடர்பாக எவ்வித ஈடுபாடும் இல்லாமல், ஆன்மீக வாழ்வில் அக்கறையின்றி, உலகப்போக்கிலே மூழ்கி வாழ்பவர்களுக்கும் உமது திருமகன் தன் இரக்கம் நிறைந்த இதயத்தில் இடமளித்துள்ளார். அந்த வெது வெதுப்பானவர்கள் அனைவர் மீதும் உமது இரக்கப் பார்வையைத் திருப்பியருளும். இயேசுவின் வேதனையுள்ள பாடுகளை முன்னிட்டும், அவர் சிலுவையில் மூன்று மணி நேரம் அனுபவித்த மரண வேதனைகளின் பொருட்டும், இவர்களுக்கு உமது மகிமையின் மீது ஒரு புதிய விருப்பத்தை உண்டுபண்ணுமாறு கேட்கின்றோம். உமது அன்பினால் உயிரூட்டம் பெறும் இவர்கள் எக்காலத்துக்கும் உமது இரக்கத்தைப் போற்றிப் புகழ்வார்களாக – ஆமென்.