சிலுவைப்பாதை

பாடுகளின் பாதையில் முதலாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசு மரணத்திற்குத் தீர்வையிடப்படுகின்றார்

தீர்ப்புக்கு ஒரு தீர்ப்பு

தீர்ப்பிடாத மனிதனை தீர்த்துக்கட்டுவதே தீர்ப்பு என்கிறது இவ்வுலகம். தீர்த்து கட்டவேண்டும் என்ற தீர்மானம் செய்து விட்டு உண்மையை பொய்யாக்கி ஒளியை இருளாக்கி விட்டோமே என்று புலம்புவது இந்த உலகம் தான். சத்தியத்திற்கு சாட்சி சொன்ன மனிதரை சரித்திரச் சுவடுகள் இல்லாமல் சாகடிக்க திட்டமிட்டனர். வயிற்றுபசியைப் போக்க வழிதேடியவர்கள் வாழ்க்கைபசியைச் சொல்லிகொடுத்தவரை ஏனோ மறந்துவிட்டார்கள். உண்மைக்கு சான்றுபகர்ந்தவர், உலகிற்கு மீட்புதந்தவர், நீதிக்கு வழிகாட்டியவர், உள்ளத்திற்கு அமைதி தந்தவர் தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்.

தியானம்:

இன்று வறுமையில் இருப்பவர்கள் நசுக்கப்படும்போது, வளமையில் இருப்பவர்கள் வளர்கப்படுகிறார்கள். அங்கே இயேசு நசுக்கப்படுகிறார். துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்காதபோது இயேசுவும் அன்னியமாக்கப்படுகிறார். நீதி திசைமாறும்போது, உண்மை பொய்யாகும்போது, இயேசுவும் அன்னியமாக்கப்படுகிறார். இருப்பதை பகிராமல் இருக்கும்போது அங்கு இயேசு ஏமாற்றப்படுகிறார்.

சிந்தனை:

'கவலைகளைக் கண்டு கண்ணீர் வடிக்காமல் போராடும் மனிதன் காலத்தால் அழியாதவன்'

செபம்:

அன்பின் இறைவா எனக்கு பிடிக்காதவர்கள் என்பதற்காக உண்மையை உணராமல், நடந்ததை பார்க்காமல், கேட்டதை அறியாமல் பிறரை தவறாமல் தீர்ப்பிடுவது பெரிய குற்றம் என்பதை உணர்ந்து இதயத்தின் சுவடுகளாக்கும் உள்ளத்தைத் தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
மனித பாவத்தாலே - மரணதீர்வை பெற்று
தூய செம்மறிபோலே-துக்கத்தடன் வருந்தி எங்கே போறீர்

பாடுகளின் பாதையில் இரண்டாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்படுதல்

சுமைகள் யாருக்காக?

நான் நினைத்திருந்தால் சிலுவைக்குப்பதிலாக வெற்றியின் ஊர்வலம் சென்றிருப்பேன். நான் நினைத்திருந்தால் முள்முடிக்கு பதிலாக மணிமகுடம் சூடியிருப்பேன். ஆனால் விரும்பவில்லை. நான் எத்தனையோ இதயங்களின் சுமைகளைச் சுமந்திருப்பேன். எதத்தனையோ குடும்பங்களின் சுமைகளைச் சுமந்திருப்பேன், எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் சொல்லியிருப்பேன், எத்தனையோ நோயாளிகளைக் குணப்படுத்தியிருபபேன், எத்தனையோ மனங்களுக்கு அன்பை அள்ளிகொடுத்திருப்பேன், ஆனால் இறுதியில் எனக்கு கிடைத்தது சிலுவைச் சுமைகள். யாருக்காக? உங்களுக்காக நான் இப்போ சுமைகளுக்கு சொந்தகாரனாக்கப்பட்டேன்.

தியானம்:

சின்ன சின்ன ஆசைளை மட்டும் விரும்பும் நீ சின்ன சின்ன சுமைகளை மறுத்து சுகமான சொகுசான வாழ்வைத் தேடுகிறாய் சுமக்க விரும்புகிறாயா? யாருக்காக?

சிந்தனை:

' சோகமான சுமைகளைப் பிறருக்காக சுமப்பவன் சரித்திரத்தில் நிலைத்து நிற்பான்'

செபம்:

எதையும் சுமையாக நினைக்கும் போது தான் தோள்கள் வலிக்கின்றன. எதையும் துன்பமாக கருதும் போது தான் உள்ளம் வாடுகின்றன. எதையும் தோல்வியாக கருதும் போது தான் இதயம் துடிக்கின்றது. குறுகிய பார்வையும் போலிக்கவுரவத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கும் இதயம் தா! சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் மனதைத் தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
பாரச்சிலுவையை நீர் - பாசத்துடன் அணைத்து
பாவத்தின் சுமை தாங்கி - ஆர்வத்துடன் நடந்து எங்கே போறீர்?

பாடுகளின் பாதையில் மூன்றாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இயேசு சிலுவையோடு முதல் முறை குப்புற விழுகின்றார்.

சறுக்கலின் தொடக்கம்

இயேசுவுக்கு இது முதல் சறுக்கலா----? சாதனையா----------? முதல் சறுக்கலில் மண்ணை முத்தமிடுகிறார். முதல் சறுக்கல் ஆதி பாவமே? இரண்டாவது சறுக்கல் யூதாசின் பாசம் என்னும் வேச முத்தமே! கை கொடுத்தவரின் காலை வாரி விட்டதால் அவருக்குச் சறுக்கல். அநீதி ஆட்சி செய்ய ஆசைப்பட்டபோது அவருக்கு தடுமாற்றம். மலைத்துப்போன மக்கள் கூட்டம் அவரை மறந்துபோனபோது பாதம் தடுமாறுகிறது. தொட்டு தொட்டு குணமாக்கிய கரங்கள் இன்று மண்ணைத் தொடுகிறது.

தியானம்:

இன்று குடிபோதையில் மண்ணில் விழும் மனிதர்கள், மனைவியை அடித்து மண்ணில் தள்ளும் மனநிலைகள், குடும்பச் சண்டையால் அடித்துக்கொண்டு மண்ணில் புரளும் குடும்பங்கள், கொலைவெறியால் மனிதனை வெட்டி மண்ணில் சாய்க்கும் மனிதர்கள், அடுத்தவரை சறுக்கவைப்பதே சாதனை என்கிறோம். நால்வரைத் தடுமாறவைப்பதே சுகம் என்கிறோம். கொடுப்பவரை கெடுப்பதே பெருமை என்கின்றோம். மனிதவாழ்வில் சறுக்கல்கள், குடும்பத்தில் தடுமாற்றங்கள், சமூகத்தில் தடைகள் அப்போதெல்லாம் இயேசுவுக்கு சறுக்கலா..... இல்லை .......இல்லை சறுகல்களை உருவாக்குகின்றோம்

சிந்தனை:

'தென்னைமரத்தின் கீற்று விழுவது வீழச்சியன்று அதன் வளர்ச்சியின் தொடர்சியாகும்'

செபம்:

சறுக்கி விழுந்து தரையை முத்தமிட்ட இயேசுவே! நாங்கள் துன்பப்படும், ஆறுதல் தேடும், அமைதி விரும்பும், அன்பைத்தேடும் உள்ளங்களுக்குத் தடங்கலாக, தடையாகத் தடுமாற்றமாக, சறுக்கலாக, வீழ்ச்சியாக, இல்லாமல் வளர்ச்சியின் எழுச்சியை உருவாக்கும் மனதைத் தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
நான் பாவி இயேசுவே – என்வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே

பாடுகளின் பாதையில் நான்காம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

தமது திருத்தாயாரை இறைமகன் இயேசு சந்திக்கின்றார்.

பாசத்தின் பரிமாற்றம்

தாயின் கருவறையில் தான் ஒரு சமுதாயமே உருவாகின்றது. தாயின் கருவறையில்தான் ஒரு சமுதாயத்திற்கு சமாதிகட்டபபடுகிறது. வரலாற்றை உருவாக்கிறவள் தாய். இலட்சிய வேட்கையைப் பிள்ளையின் இதயத்தில் விதைப்பவள் தாய். ஓவ்வொரு மனிதனின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்துபவள் தாய். இலட்சியவாதி தாயின் கருவறையில் தான் உதயமாகிறாள் என்பதைத் தெளிவுபடுத்தியவள் அன்னை மரியாள். அன்பு மகனுக்கு ஆறுதல் சொல்லி மகனோடு தானும் கல்லாரிப் பயணம் போகிறாள். இதோ தள்ளாடி தடுமாறும் மகனின் முகத்தில் இரத்தம் சொட்டச் சொட்டப் பார்த்தபோது தாயின் இதயமே இரத்த கண்ணீர் வடிக்கவேண்டும், ஆனால் இவளோ வீரத்தாய் மனந்தளராமல் மகனுக்குப் பலமூட்டுகிறாள்

தியானம்:

ஊர்வம்பு உனக்கு எதுக்கு என்று சொல்லும் தாய்மார்கள், ஆடம்பரப் பவனி வர ஆசைப்படும் தாய்மார்கள், மூடநம்பிக்கையில் முடங்கிகிடக்கும் தாய்மார்கள், தாய்மையின் புனிதத்தை கலங்கப்படுத்தும் தாய்மார்கள,; அன்னை மரியாளுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

சிந்தனை:

'தாயின் கருவறையில்தான் ஒரு சமுதாயம் உதயமாகிறது என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்துவள் தாய் மட்டுமே'

செபம்:

சுமைக்குச் சொந்தமாக்கப்பட்ட இயேசுவே! வாழ்கைப் பாதையில் நான் பலவழிகளில் விழுந்து கிடக்கிறேன். எழவே முடியாது என்ற என்னம் என்னை வாட்டுகிறது. வீழ்ச்சியும் எழுச்சியும்தான் மனிதனை முன்னுக்குக் கொண்டுவரும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு நடக்க ஆற்றல் தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார்
மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே
மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே

பாடுகளின் பாதையில் ஐந்தாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகனின் சிலுவையை சுமக்க சீமோன் உதவி செய்கின்றார்

மலரும் மனித நேயம்

மலர்கின்ற மலர்கள் அத்தனையும் இறைவனின் திருவடிக்கு வருவதில்லை. தொடுக்கின்ற மாலைகள் அனைத்தும் மங்கள காரியத்தில் பயன்படுத்துவதில்லை. இயேசுவோடு எத்தனையோ மனிதர்கள் இருந்தாலும் சீமோனுக்கு மட்டும் உதவும் வாய்ப்புக்கிடைத்தது. மனித குலத்தில் அன்பு செய்வதும் பெறுவதும், உதவி செய்வதும் பெறுவதும் அடிபடைக்கூறுகள். இதை உலகுக்கு அறிமுகப்படுதியவர் புறவினத்து சீமோன். துன்பத்தில் உதவாத மனிதன் இருந்து என்ன பயன்? குருவுக்கு உதவாத சீடன் இருந்து என்ன பயன்?

தியானம்:

துன்பத்தில் உதவாத மனிதன் இருந்து என்ன பயன்? குருவுக்கு உதவாத சீடன் இருந்து என்ன பயன்? பிறர் நமது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும், பிறர் நமது சுமைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும், பிறர் நமக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். ஆனால் நாம் பகிர்ந்த கொள்ளுகின்றோமா? வறுமையின் கோரப்பிடியில் வாழும் மனிதனுக்கு உதவியதுண்டா? இருண்டு போன இதயங்களை பார்க்கும்போது உன் இதயம் ஈரமானதுண்டா? சுயவாழ்வில் சுகம் காணும் நீ பிறரின் சோகங்களை பகிர்ந்ததுண்டா?

சிந்தனை:

'இருண்டுபோன இதயங்களை ஈரமாக்கியவன் எல்லா இதயங்களிலும் போற்றப்படுவான்'

செபம்:

பிறரின் சுமைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட இறைவா! உன் துன்பத்தில் பங்கேற்ற சீமோனைப் போன்று நாங்கள் எல்லா சூழ்நிலையிலும் பிறருடன் அவரவர் தேவைக்கேற்ப எங்கள் உடமைகளையும் உணர்வுகளையும் ஆறுதல் தரும் வார்த்தைகளையும் பகிர்ந்து வாழ அருள் தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
கத்தரே உம்வதனம் -இரத்த கறையால் மங்கி
உத்தமி வெரோனிக்கா வெண்துகிலால் துடைத்தும் எங்கே போறீர்?

பாடுகளின் பாதையில் ஆறாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

புதுமைப் பெண் வெரோணிக்கா இறைமகனின் திருமுகத்தைத் துடைக்கின்றாள்

பெண் என்னும் புயல்

அன்று அன்னை மரியாளின் அன்பு முத்தங்களை பெற்ற திருமுகம் இப்போது இரத்தக் கோடுகளில் காட்சியளிக்கிறது. அன்பு கலந்த துயரத்தோடு அன்பரின் முகத்தை துடைக்க ஒடிவருகிறாள் பெண் என்னும் புயலானவள். இதோ மனதில் துணிவோடும், கையில் துணியோடும் பூவாகவாழ்ந்தவள் புயலாக புறப்படுகிறாள். இயேசுவின்மேல் அவள் கொண்டிருந்த அன்பையும் இரக்கத்தையும் மௌனமாக எடுத்து சொல்லுகிறாள். அழகு முகம் அலங்கோலமானது, புனித முகம் புண்கள்மயமானது, இதைக்கண்ட பூவான பெண்ணின் முகம் புயலானது

தியானம்:

உறவின் எல்லைக்குள் அன்பு அடங்குவதில்லை உணர்வுகளின் கட்டுப்பாட்டுக்குள் கண்ணீர் அடங்குவதில்லை. இதை உள்ளத்தில் உறையவைத்தவள் வெரோனிக்காள். சட்டங்கள் சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வீதிக்கு வந்தவள் வெரோனிக்காள்

சிந்தனை:

'கண்களால் அழும் பெண்களைவிடக் குடும்பச்சுமையால் இதயத்தால் அழும் பெண்களே இங்கு அதிகம்'

செபம்:

அன்பின் இறைவா! பெண்களை சமுதாயத்தின் கண்களாக மதித்து வாழவும், ஆணும் பெண்ணும் இறைவன் படைப்பில் சமம் என உணர்ந்து பெண்களின் உரிமைகளை மதித்து நடக்கவும் அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல் குரல் கொடுக்கும் துணிவையும் எங்கள் பெண்ணினத்திற்கு தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
இயேசுவே என் தெய்வமே என்மேல் மனமிரங்கும்
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்
உம்மை தேடாமல் வாழ்ந்து வந்தேன் என்னை மன்னியும் தெய்வமே

பாடுகளின் பாதையில் ஏழாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசு இரண்டாம் முறை குப்புற விழுகின்றார்

தடுமாறும் பாதங்கள்

பாதங்கள் தடுமாறினாலும் பாதை மாறாமல் பயணமாகிறார், உடல் தளர்ந்து போனாலும் உள்ளம் தளர்ந்து போகாமல் சிலுவை சுமக்கிறார். இது வீழ்ச்சியன்று மனிதப் பயணத்தில் ஒரு சறுக்கல், தடங்கல், தடுமாற்றம் அவ்வளவுதான். சுமையால் சோர்ந்து போனாலும் பூவாய் எழுகிறார். இயேவின் உடலை உடைத்தார்கள் உள்ளத்தை உடைக்கமுடியவில்லை. இதயத்தை சிதைத்தார்கள் இலட்சியத்தை சிதைக்க முடியவில்லை. நிலை மாறும் உலகில் தடுமாறும் மனிதனுக்கு வீழ்ச்சி எழுகவே என்பதை இயேசுவின் தடுமாற்றம் நம்மை எழுச்சி பெற அழைக்கின்றது.

தியானம்:

நமது வாழ்வில் விழிகள் கவனம் குறையும் போது விழுகிறோம், வாழ்வில் கவனம் இல்லாதபோது குழியில் விழுகிறோம். எச்சரிக்கை இல்லாதபோது சுமையால் விழுகிறோம். நாம் சொல்லால் செயலால் சுயநலத்தால் துன்புறுத்தும் போதெல்லாம் வீழ்வது அவர்களல்ல நாம் தாம் என்பதை உணர்வோம்.

சிந்தனை:

'தடுமாற்றங்களையும், தடைகற்றளையும், படிக்கற்களாக மாற்றும் மனிதன் மனிதகுலத்தின் மகத்தானவன்'

செபம்:

அன்பு இறைவா வீழ்வதும் எழுவதும் அன்றாட நிகழ்வுகள்தான். துன்பங்களும் தடைகளும் தடங்கல்களும், தடுமாற்றங்களும் என்னை சூழ்ந்து கொண்டாலும் தன்னம்பிக்கையோடு எழுந்து நடக்க ஆற்றல் தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
பாடுகள் சுமந்தவரே – உம்மை ஆராதிக்கின்றேன்
பாடுகள் வழிதான் மகிமையே – என் பாடுகள் உமக்கே சொந்தம்

பாடுகளின் பாதையில் எட்டாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இயேசு ஜெருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்.

கண்ணீர் தான் கடைசி ஆயுதம்

தனது சாவு கண்முன் கலக்கமின்றி நிறைவேற்றப்போகிறது எனத்தெரிந்தும், துன்பத்தின் மத்தியில் ஒரு மணிக்குரல், அழுகையின் மத்தியில் அன்புக்குரல், சுமைகளுக்கு மத்தியில் ஒரு சொந்தக்குரல், வேதனைக்கு மத்தியில் ஒரு வேண்டுதல்குரல், 'எனக்காக அன்று உங்களுக்காக அழுங்கள்' என்ற அமைதியின் குரல், என்னை அன்புசெய்யமாட்டார்களா, எனக்காக அழமாட்டார்களா, எனக்கு ஆறுதல் சொல்லமாட்டார்களா, எனது துயரத்தில் பங்கெடுக்கமாட்டார்களா, எனது சுமைகளை பகிர்ந்து கொள்ளமாட்டார்களா, எனக்காக கண்ணீர் சிந்தமாட்டார்களா, என ஏங்கும் உலகில் எனக்காக வேண்டாம் உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்கின்றார்.

தியானம்:

நாம் அழுவோம் யாருக்காக? குடும்பத்தை குலைக்கும் பெண்களுக்காகவா, சமாதானம் இல்லாத குடும்பங்களுக்காகவா, குடிவெறியில் குடும்பத்தை மறந்துபோன கணவர்களுக்காகவா, ஆடம்பர செலவுசெய்யும் குடும்ப பெண்களுக்காகவா, பிள்ளைகளை வெறுக்கும் பெற்றோருக்காகவா? பெறுப்பற்று வாழ நினைக்கும் பிள்ளைகளுக்காகவா.?

சிந்தனை:

'பிறரின் சுமைகளையும் கண்ணீரையும் சுமக்க மறந்தவன் மரணம் வரும்முன்னே மரித்து போவான்'

செபம்:

துன்பத்தில் ஆறுதல் சொன்ன இனிய இயேசுவே! எங்கள் கண்ணீர்கள் அழுகைகள், வேதனைகள் வெறும் இயலாமையின் வெளிப்பாடாக இல்லாமல் ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாக மாறும் மனநிலை தாரும்.ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
பககெல்லாம் இரவெல்லாம் அழுகின்றேன் ஜயா
உம்பாதம் விழுந்து கண்ணீரால் நனைத்து
உம்மையே நினைக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன்

பாடுகளின் பாதையில் ஒன்பதாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசு மூன்றாம் முறை குப்புற விழுகின்றார்

மண்ணில் விழும் மனிதம்

கலிலேயா சமாரியா எங்கும் சென்று போதித்த கால்கள் தடுக்கி விழுந்தன. ஆனால் வீழ்ந்து விடவில்லை தடுமாறினார் தம்மை இழக்கவில்லை. இதோ இயேசு விழுந்தார். அவரின் இலட்சியம் விழவில்லை. களைப்புற்று தள்ளாடி தடுமாறி சுமை தாங்க முடியாமல் மண்ணை முத்தமிடுகிறார்.

தியானம்:

அன்று பாவியின் வீழ்சியால் பதிய திருச்சபை எழுச்சி பெற்றது, சவுலின் வீழ்ச்சி பவுலாக எழுச்சிபெற்றது, ஊதாரிமகனின் வீழ்ச்சி மன்னிப்பாக எழுச்சிபெற்றது. நாம் மனமுடைந்தவர்களைத் தேடிச்செலவோம், உள்ளம் தவிப்போருக்கு ஆறுதல் சொல்வோம், தடுமாறும் மனிதத்தை நிலைநாட்டுவோம். இயேசுவின் கால்களாக கரங்களாக இந்த மண்ணில் மனிதம் மலரச்செய்வோம்

சிந்தனை:

'சில மகத்தான மனிதர்களால்தான் இந்த மண்ணில் இன்றும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.'

செபம்:

எங்கள் பாவங்களுக்காக மண்ணை முத்தமிட்ட இறைவா! துன்பத்தை கண்டு துவண்டுவிடாமல் தடைகளை கண்டு தளர்ந்து விடாமல் வீழ்சியை கண்டு விழுந்து விடாமல் எழுச்சியுடன் இலட்சிய பாதையில் பயணம் செய்ய அருள்தாரும்.ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே

பாடுகளின் பாதையில் பத்தாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் யேசுவின் ஆடைகள் களையப்படுகின்றன

அன்பிற்கோர் அவமானம்

மனிதம் ஆடையின்றி அவமானப்படுத்தப்படுகின்றது. அடிப்படை மனித உரிமை பறிக்கப்படுகின்றது. மனிதமாண்பு உரியப்படுகின்றது, நோயாளிக்கு சுகம் கொடுத்தவர், குருடனுக்கு பார்வைகொடுத்தவர், இறுதியில் மனிதம் காக்க உடையைகொடுக்கிறார். இன்று எங்கெல்லலாம் மனிதம் மானபங்கபடுத்தப்படுகிறதோ அங்கேயெல்லாம் இயேசுவின் ஆடை களையப்படுகிறது. ஆணவம் சுயநலம் பொறாமை மதவெறி இவைதலைவிரிக்கும்போது இயேசுவின் ஆடை களையப்படுகிறது.

தியானம்:

பாலியல் பலாத்காரம் நடக்கும்போது, உழைப்புக்கு ஊதியம் கிடைக்காதபோது, மதத்தின்பெயரால் கலவரம் உருவாகும்போது, மனிதனுக்கு மனிதம் புதைக்கப்படும்போது, உரிமைகள் மறுத்து மனிதனை அடிமைபடுத்தும்போது இயேசுமானபங்கப்படுத்தப்படுகிறார். அன்பு சகோதரனே சகோதரியே எப்போது ஆடைகள்பறிக்கப்படுவதை நிறுத்தப்போகிறாய்? நீயே பதில் சொல்

சிந்தனை:

'சோகங்களில் மிகப்பெரிய சோகம் இறைசாயலில் படைக்கப்பட்ட மனிதக்கு ஆடையில்லை என்பது தான்'

செபம்:

அன்பின் இறைவா உறவுக்கு கைகொடுக்கவும், உரிமைக்குரல்கொடுக்கவும், மனிதநேயம் என்ற ஆடையால் மனிதனை மதித்து வாழவும், ஆடையிழந்த மனிதனின் மானத்தையும,; மனிதத்தையும் காக்கும் மனதைத்தாரும்.ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
அன்பே கல்வாரி அன்பே உம்மை பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் பரிகாரப் பலியானீர்

பாடுகளின் பாதையில் பதினோராம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்

அன்பிற்கு ஆணிகளா?

புதுமைகள் செய்த கரங்கள், தொட்டு தொட்டு குணமாக்கிய கைகள், இருப்பதை பகிர்ந்து கொடுத்த உள்ளம், அழுகையின் கண்ணீரைக் கண்டுதுடித்த இதயம். தடுமாறும் மனிதனைத் தட்டிக்கொடுத்த தங்க கரங்களில் இரும்பு ஆணிகள். வாழ்வில் வழுக்கி விழுந்தவனை தொட்டு வளமாக்கியவர், பகைமை உள்ள இடத்தில் பாசத்தை விதையாக்கியவர், கலிலேயா கடலோரம் நடந்து கால்கடுக்க போதித்தவர். தொட்டு தொட்டு குணமாக்கிய கரங்களையும் கால்கடுக்க போதித்த கால்களையும் நன்றி கெட்ட சமூகம் தீர்த்து கட்டுவதே தீர்ப்பு என்கிறது.

தியானம்:

இன்று பண ஆசையால் சுயநலத்தால், பிறரை ஏமாற்றும் போது சாதியால் ,இனத்தால். மொழியால் பிறரை தாழ்வாக நடத்தும்போது, அமைதியான குடும்பத்தில் அமைதி சீர்குலைக்கும் போது, அடுத்தவனின் வளர்ச்சியை கண்டு பொறாமை கூடுகட்டும் போதெல்லாம் இன்றும் இயேசு சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். மனிதா எப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறாய்?

சிந்தனை:

'தடுமாறும் மனிதனைக் தட்டிக்கொடுக்கும் தங்கக் கரங்களை பெற்றவர் இயேசு'

செபம்:

அன்பிற்காக கரங்களில் ஆணிகளை சுமந்த இயேவே, பிறர் வாழ்வில் ஆணிகளாக, சிலுவைகளாக, முள்ளாக இல்லாமல் இனியவார்த்தைகளால் பிறர்நல வாழ்க்கையால் மற்றவரை புண்படுத்தாமல் வாழும் அருள்தாரும்.ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே — உம்மை
நெஞ்சம் உருகுதையா

பாடுகளின் பாதையில் பன்னிரண்டாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசு சிலுவையில் உயிர் விடுகின்றார்

மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே

கை கொடுத்தவர்கள் கண்டுகொள்ளாமல் போனதால் இங்கே ஒரு கொலை நடக்கிறது விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே ஒரு உயிர் ஊசலாடுகிறது. இறுதி மூச்சுவரை உறவுக்காகப் போராடிய அந்த உயிர் தாகமாக இருக்கிறது. விணணும்,மண்ணும்,கடலும் மலையும் மட்டுமே மௌன அஞ்சலி செலுத்துகிறது.

தியானம்:

இன்று மன்னிப்பு என்பது மனிதனுக்கன்று இறைவனுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. மனித உறவுகள் மண்ணில் மரித்து போனதால் அது இறைவனுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. தான் உயிர்வாழத் தனது உறுப்புக்களை இழக்கும் உலகில் பிறர் உறவு வளரத் தன்னுயிரையே இழக்கலாம் என்றாகிவிட்டார் இயேசு. இவர் சாகவில்லை ஆவியை மட்டுமே இழந்தார்.

சிந்தனை:

' மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே மனித வாழ்க்கை குறுகிய காலம் மட்டுமே'

செபம்:

தடைகளை எல்லாம் தாண்டி இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றி விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே புதிய உறவுகளை உருவாக்கிய எங்கள் இனிய இயேசுவே! உம் விருப்பத்தை இந்த மண்ணுலகில் நிறைவேற்ற அருள்தாரும்,ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர்

பாடுகளின் பாதையில் பதின்மூன்றாம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் இயேசுவின் உடலை அன்னை மரியாள் மடியில் வளர்த்துகிறார்கள்

தாயின் மடியில் சேயின் உடல்

தாயின் மடியில் தலைவைத்தால் துயரம் தெரிவதில்லை. ஆனால் அந்த தாயின் மடியில் சேயின் உடல் துவண்டு கிடக்கும் நிலை மிகவும் சோகமானது, துயரமானது, வேதனையானது. இயேசுவின் வார்த்தைகளை உடலில் சுமந்தவள், இன்று அவரின் உடலை மடியில் சுமக்கிறாள். பத்துமாதம் கருவில் சுமந்தவள், பட்டுப்பேர்ன மகனை மடியில் சுமக்கிறாள். தாயை மகன் சுமக்கும் உலகில் இங்கே மகனை தாய் சுமக்கிறாள். குருடனுக்கு ஒளி கொடுத்தவர் தன் ஒளி இழந்து தாயின் மடியில் கிடக்கிறார்.

தியானம்:

உன்னை பத்துமாதம் சுமந்தவள் தாய், உன்னை பாலூட்டிவளர்த்தவள் தாய், உன்பசிபோக்கத் தன்னை பசியாக்கிகொண்டவள் தாய், உன் தேவைகளை நிறைவுசெய்யத் தன் தேவைகளை சுருக்கிக்கொண்டவள் தாய், உனக்காக இதயத்தால் அழுபவள் தாய், உன் வளர்ச்சிக்கு உன்னை ஊட்டி வளர்த்தவள் தாய். இப்படி உன்னை அன்பு செய்யும் தாய்க்கு வயதான காலத்தில் அன்புசெய்கிறாயா? மதிக்கிறாயா? தேவைகளை நிறைவு செய்கிறாயா? உன்னையே சுய ஆய்வு செய்து பார்.

சிந்தனை:

'இருளில் ஒளி ஏற்றுபவன் பல இதயங்களில் நிரந்தரமாகக் கூடுகட்டிதங்கிவிடுகிறான்'

செபம்:

பெற்றோருக்கு கீழ்படிந்து நடந்த இனிய இயேசுவே! நான் இனியாவது எனது தாயை மதித்து நடக்கவும். சொல்வதை கேட்கவும் வயதான காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவும் அன்பு செய்யவும் அருள்தாரும், ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பாடுகளின் பாதையில் பதின்நான்காம் நிலை

குரு:திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த இஸ்தோத்திரம் பண்ணுகின்றோம்.

எல்:அதேனென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி

இறைமகன் யேசுவின் உடல் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறது

அடக்கம் ஒரு புதிய தொடக்கம்

இவ்வுலகில் பிறக்க வீடு கிடைக்கவில்லை, தலைசாய்க்க இடம் கிடைக்கவில்லை, அடக்கம் செய்ய ஒரு கல்லறை கிடைக்கவில்லை, தாயின் மடியில் கிடந்த மனிதன் அடுத்தவர் பூமியின் மடியில் அடங்குகிறார். அடக்கம் ஒரு புதிய தொடக்கமே. இங்கு புரட்சி விதை புதைக்கப்படுகிறது. விதைக்கப்படுவது விழுதாகவே அவர் அடக்கப்பட்டார் ஆனால் அடங்கிவிடவில்லை, அவர் வீழ்ந்தார். ஆனால் இலட்சியங்கள் வீழ்வதில்லை புயல் காற்று மழை மின்னலால் இதழின் மென்மையைக் களைந்தாலும் அதன் மணத்தை அழிக்கமுடியாது. இயேசுவைப் புதைத்துவிடலாம் அவரின் மதிப்பீடுகளை யாராலும் புதைக்க முடியாது

தியானம்:

மேற்கில் மறையும் சூரியன் மேற்கோடு நிற்பதில்லை மறைவது எழுவதற்கே கிழக்கு வெளுக்கிறது உதயம் பிறக்கிறது இயேசுவின் மரணம் பூமியின் மூடுவிழா அன்று புதிய சொர்க்கத்தின் திறப்புவிழா விழுந்தாலும் விழுதாகும் மரமானார்.

சிந்தனை:

' காலத்தால் அழியாதவனைக் கல்லறைக்குள் அடக்கிவிட்டாலும் அவனின் சிந்தனைகள் பூத்துக் குலுங்கிப் புதுமணம் வீசும்'

செபம்:

அன்பு இறைவா! மடிவது எழுகவே வீழ்ச்சி எழுச்சியின் தொடக்கமே என்பதை உணரவும் விழுந்தாலும் விழுதாகும் மரங்களாகும் மனதைத் தாரும் ஆமேன்

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.

பாடல்
உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா இதயத்திலே இடம் தருவாயா

பாடுகளின் பாதை வழிபாட்டின் முடிவு வேண்டுதல்

அன்புக்கினிய இரட்சகர் இயேசுவே!

உம்மை சிதைத்து மனிதம் வாழ்வுபெற நீர் ஏற்றுக்கொண்ட சிலுவைப்பாதையில் உம்பாடுகளைத் தியானித்தோம். தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுப்பது தானம், தன்னிடம் இருப்பதையெல்லாம் கொடுத்து தன்னையே கொடுப்பது தியாகம், எனவே தான் எம் தியாக தலைவர் நீர் என்பதை இந்த நேரத்தில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் மறவாதிருக்க எமக்கு வரமருளும்.

தியாகத்தலைவா இயேசுவே! நாம் உமக்கு பிரியமற்றதும் விரோதமானது எதுவும் எம்மிடத்தில் இருந்தால் அதை உமது அன்பு அக்கினியால் சுட்டெரித்தருளும். நாம் என்றும் உம்மை பிரியாமல் இருக்க தூய சினேகத்தை எம் இதயத்தில் பதிப்பித்தருளும்
உமது இரக்கத்தை மன்றாடுபவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். தூய ஆவியின் ஜக்கியத்தில் என்னென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற ஆண்டவருமாகிய தந்தையின் திருமகனே உம்மை வேண்டுகிறோம். ஆமேன்

பரிசுத்த தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்போம்.
பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே..............
அருள் நிறைந்த மரியாயே.........
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக
( 3 தடவை )